மும்பை:

உலக கிரிக்கெட் கோப்பை போட்டிக்குப் பின் நடக்கும் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே மாதிரியான பந்து பயன்படுத்தப்படும் என உலக கிரிக்கெட் கமிட்டி அறிவிப்புக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


பந்துகளை மாற்றிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, ஒரே மாதிரியான பந்தை மட்டுமே உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் போட்டியில் பயன்படுத்தப்படும் என மெல்போன் கிரிக்கெட் கமிட்டியின் உலக கிரிக்கெட் கமிட்டி தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனர் கவாஸ்கர், “ஒரே மாதிரியான பந்தை பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது துரதிஷ்டமானது. ஒவ்வொரு நாட்டின் சீதோஷ்ணநிலையும் மாறுபடும் என்பதால், ஒரே பந்தை பயன்படுத்துவது கடினம்.

ஒரே மாதிரியான பந்தை பயன்படுத்துவற்கு முன்பு, ஒரே மாதிரியான ஆடுகளத்தையும், ஒரே மாதிரியான பேட்டையும் உருவாக்கி விட்டு, ஒரே மாதரியான பந்தை பயன்படுத்த வேண்டும்.

எஸ்ஜி பந்துகள் இந்தியாவிலும், ட்யூக்ஸ் பந்துகள் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகளிலும், கூகாபுரா பந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா உட்பட சில நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.

மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவாஸ்கர், “இந்தியா வெற்றி பெறுமா? என விராட் கோலியின் கைரேகையைப் பார்த்து சொல்ல முடியாது. இந்தியா நிச்சயமாக கோப்பையை வெல்லும் என்று நம்புகின்றேன்” என்றார்.

இதற்கிடையே. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின் ஒரே மாதிரியான ட்யூக் பந்துகளை பயன்படுத்துவதற்கு விராட் கோலியும், அஸ்வினும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.