அனைத்து போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார் கவுதம் கம்பீர்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த கவுதம் கம்பீர் அனைத்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

GAMBHIR

கடந்த 15 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் கவுதம் கம்பீர் தற்போது சர்வதேச அணியில் இடம்பெறவில்லை. கடைசியாக 2016ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கம்பீர் பங்கேற்றார். தற்போது டெல்லி அணிக்கக உள்ளூர் போட்டிகளில் கம்பீர் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் அனைத்து விளையாட்டுகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக கம்பீர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37வயதாகும் கம்பீர் 2003ம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 37 டி20 மற்றும் 147 ஒருநாள் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.

இவர் டெஸ்ட் போட்டியில் 22 அரைசதம் மற்றும் 9 சதங்களுடன் 4154 ரன்களும், ஒருநாள் போட்டியில் 34 அரைசதம், 11 சதங்களுடன் 5238 ரன்களும், டி20 போட்டிகளில் 7 அரைசதங்களுடன் மொத்தமாக 932 ரன்களும் சேர்த்துள்ளார். அதேபோல், இந்திய அணி 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றபோது கம்பீர் 57 ரன்களும், 2011ம் ஆண்டு 50 ஓவர் கொண்ட உலகக்கோப்பையை வெல்லும்போது 97 ரன்களும் குவித்து முத்திரை பதித்தார்.