மும்பை

கொரோனா அச்சுறுத்தலால் மூடபப்ட்டிருந்த வழிபாட்டு தலங்கள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.  இங்கு நேற்று வரை 65.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 1.38 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 63.53 லட்சம் பேர் குணம் அடைந்து நேற்று சிகிச்சையில் 39,191 பேர் இருந்தனர்.   ஆனால் தற்போது இம்மாநிலத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதையொட்டி மகாராஷ்டிர மாநில ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளன.  வரும் அக்டோபர் 4 முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.   அத்துடன் வரும் அக்டோபர் 7 முதல் நவராத்திரி தொடங்குகிறது.  மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரியும் ஒன்றாகும்.

எனவே அக்டோபர் 7 அதாவது நவராத்திரி முதல் நாள் முதல் மகாராஷ்டிராவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.  மேலும்  அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் அவசியம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.