டெல்லி: புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஆகஸ்ட் 6) நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வயது முதிர்வு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீல் சேரில் வந்து வாக்களித்தார்.

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் களமிறக்கப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக, மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டு உள்ளார். இருவருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை 10மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி உள்பட பலர் தங்களது வாக்குகளை செலுத்திய நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீல்சேரில் வந்து தனது வாக்கினை செலுத்தினார்.