மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்று புதிய கட்சியை தொடங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கண்ணன், புதுவை நாராயணசாமி அரசை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக சவால் விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான கண்ணன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை தலைவராகவும், அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

புதுச்சேரி அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. தினகரன் ஆதரவு நிலைபாடு, பின்னர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிலைபாடு என்று பல்வேறு நிலைபாடுகளை புதுவை அதிமுக பொறுப்பாளர் அன்பழகன் எடுத்தார். அத்தோடு, புதுவையில் பாஜகவின் ஏஜென்டாக துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செயல்படுவதாக கூறி, காங்கிரஸுக்கு ஆதரவாக அன்பழகன் குரல் கொடுத்தார். இதனால் அதிருப்தி அடைந்த கண்ணன், அதன் பிறகு அரசியலுக்கு ஓய்வு கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்கிற பெயரில், புதிய அரசியல் கட்சி ஒன்றை கண்ணன் தொடங்கியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதுச்சேரியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் படுமோசமாக உள்ளதால் நான் மீண்டும் களத்திற்கு வந்துள்ளேன். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் எங்களின் கட்சி, புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கப்போவது உறுதி. புதுச்சேரி அரசு தற்போது தவறு மேல் தவறுகளை செய்து வருகிறது. நாராயணசாமி ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்புவேன்” என்று தெரிவித்தார்.