சமூக ஆர்வலரும், குன்னம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. (தி.மு.க.)வுமான எஸ். எஸ். சிவசங்கர்,  பிரதமர் மோடிக்கு முகநூல் மூலம் எழுதியிருக்கும் பகிரங்க கடிதம்:
ந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கு,
இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகன் சிவசங்கர் எழுதுவது.
வணக்கம் !
உங்கள் கருப்புப் பண ஒழிப்பு நாடகம் ஒரு சோக முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உங்கள் வீர வசனம் சாரம் இழந்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கண்ணீரின் கிளிசரின் வாசம் மூக்கை துளைக்க ஆரம்பித்துள்ளது. உங்கள் நாடக வசன சாயம் வெளுக்க துவங்கி விட்டது, அந்த நோட்டை போல. உங்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘மை’ கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.
முகம்மது பின் துக்ளக் பற்றிய தகவல்களை கேள்விப்பட்ட தலைமுறைக்கு நடைமுறையில் நிகழ்த்திக் காட்டி விட்டீர்கள். ஆனால் துக்ளக் கூட தனது தன்னிச்சையான முடிவுகளை அமல்படுத்தி தான் “பேர்” வாங்கினார். ஆனால் நீங்கள் கார்ப்பரேட்டுகளின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியும், மற்றவர்களின் முடிவுகளை உங்களுக்காக பயன்படுத்தியும் “பெரும்பேரு” பெற்று விட்டீர்கள்.

மோடியும் செல்லாத நோட்டும்
மோடியும் செல்லாத நோட்டும்

500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிப்பது என்பது “கள்ள நோட்டை” ஒழிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் ஆலோசனை. பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் அச்சடித்த கள்ள நோட்டுகளை இந்தியாவில் புழங்க விட்டதிலேயே உங்கள் தலைமையிலான அரசின் உளவுத்துறையின் கையாலாகாத்தனம் வெளிப்பட்டு விட்டது. அதனை சரி செய்ய ரிசர்வ் வங்கி கொடுத்த ஆலோசனையை நீங்கள் ‘ஹைஜாக்’ செய்ததாலேயே இந்தக் குழப்பம்.
பொது சிவில் சட்டம் அமலாக்கம் என அச்சுறுத்தல், வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை கொண்டு வருவதாக சொல்லி செயல்படுத்த முடியாமல் போனது, வேலைவாய்ப்பை பெருக்குவதாக கொடுத்த வாக்குறுதி மறந்து போனது, “ஸ்வச் பாரத், மேக் இன் இந்தியா” போன்ற திட்டங்கள் வெற்று வசனமாகிப் போனது என உங்கள் பா.ஜ.க அரசின் தோல்விகளில் இருந்து திசைதிருப்ப ஒரு ‘கவனத் திருப்பல்’ தேவைப்பட்டது உங்களுக்கு.
இந்த நேரத்தில் கிடைத்த அரிய வாய்ப்பாக “கள்ள நோட்டு “, “கருப்புப் பண ஒழிப்பாக” கையில் எடுத்தீர்கள். ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய நேரம் இல்லாத அளவிற்கு ஏதோ ஒரு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கக் காத்திருந்திருக்கும் என நினைக்கிறேன். அதனால் தான் இந்த அளவு அவசரத்தோடு அறிவித்து விட்டீர்கள்.
அரசும், அரசை சார்ந்த நிறுவனங்களும் சட்டப்படி தான் இயங்க வேண்டும். அது மூளையின் ஆணைப்படி உடல் இயங்குவது போல. ஆனால் இதயத்தின் வழிகாட்டுதலையும் கருத்தில் கொள்ள வேண்டும். மூளையின் ஆணை அதிகாரிகளின் வழிமுறை. மக்கள் பிரதிநிதிகள் இதயத்தின் வழியில் செயல்பட வேண்டும், அன்போடும் கருணையோடும். ஆனால் நீங்கள் லாபக்கணக்கு பார்த்து மூளையின் வழியிலேயே செயல்பட்டு விட்டீர்கள்.
அறிவிப்பின் போது, ” நாளை முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வெற்றுக் காகிதங்கள்” என்று முழங்கினீர்களே, என்ன மமதை ? அப்பாவி மக்கள் தங்கள் உடலை வருத்தி சம்பாதித்து வைத்திருந்த பணத்தை குறித்து இந்த வார்த்தையை சொல்ல என்ன தைரியம்? இந்த மக்கள் அளித்த வாக்குகள் கொடுத்த அதிகாரத்தின் திமிர் உங்கள் கண்ணை மறைத்து விட்டது, காலம் பதில் சொல்லும்.
இப்போது இந்தியத் திருநாடே வங்கிக் கிளைகள் முன்பும், ஏ.டி.எம்-கள் முன்பும் விடியற்காலையில் இருந்தே, தவமிருக்கிறது. ஓரிரு . பிரச்சினை தீர்ந்து விடும் என முழங்கினீர்கள். ஓரிரு நாட்கள் கடந்த பிறகு அருண்ஜெட்லி வாய் திறந்தார், ” இன்னும் மூன்று நாட்கள் ஆகும்”. ஆனால் இன்றோடு எட்டு நாட்கள் கடந்து விட்டன. பிரச்சினை தீரும், என்ற நம்பிக்கை பொய்த்தே போய் விட்டது, மக்களுக்கு.
சிவசங்கர்
சிவசங்கர்

திட்டத்தை அறிவித்து விட்டு வழக்கம் போல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் கிளம்பி விட்டீர்கள். இந்திய மக்கள் ஏ.டி.எம் முன் வதங்கிய போது, புல்லட் ரயில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தீர்கள். அதைவிட மக்கள் நொந்து போனது, நீரோ மன்னன் போல், நீங்கள் பிடில் வாசிக்கும் ஆனந்தப் புகைப்படம்.
இன்னும் ஆழமாகப் போனால், கார்ப்பரேட்டுகளின் திட்டம் தான் இந்த நடவடிக்கை என்பது புலப்படும். ஏழை, நடுத்தர மக்களின் பணத்தை வங்கிக்கு கொண்டு வந்து, கார்ப்பரேட்டுகளுக்கு கடனாக அள்ளிக் கொடுக்க துடிக்கும் உங்கள் ஆர்வம் தெரிய வரும். உண்மை விரைவில் வெளிவந்து விடும். அதானியின் விமானத்தில் ஊர் சுற்றும் நீங்களா நியாயம் பற்றி முழங்குவது ? அதானிக்கு கடன் வழங்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து சென்ற நீங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களை வங்கி வாசலில் நிர்கதியாய் விட்டது உங்கள் வாழ் நாள் சாபமாக மாறும்.
வங்கிக்கு வருவோர் கையில் உங்கள் அரசு வைக்கப் போகும் மை தான், உங்கள் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி என அறியாமல் ஆனந்தமாக இருங்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக இருபது பேர் உயிர் இழந்தும் உங்கள் பிடிவாதம் தளரவில்லை. உயிரிழந்த அந்த உடல்களுக்கு வைக்கப்பட்ட ‘தீ’ தான், உங்கள் ஆட்சிக்கு இடப்பட்ட “தீ” என்பதறியாமல் அதிகார மயக்கத்தில் உள்ளீர்கள்.
முடிவு நெருங்குகிறது, நோட்டுகளை போலவே.
வெறுப்புடன்,
இந்தியக் குடிமகன் ‘சிவசங்கர்’.