தேனி: வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ன் தாயார் பழனியம்மாள் காலமானார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம்.  அவரது தாயார்  பழனியம்மாள் (வயது 95). வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பழனியம்மாளின் உடல் நிலை கடந்த சில நாட்களாக  பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,  பழனியம்மாள்  நேற்று  இரவு காலமானார்.

முன்னதாக தனது தாயாரை நேற்று முன்தினம் சந்தித்து உடல்நலம் விசாரித்து விட்டு, நேற்று ஓபிஎஸ் சென்னையில், ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், நேற்று இரவு தேனி மருத்துவமனையில்,  பழனியம்மாள்  சிகிச்சை பலனின்றி காலமானார்.

தாயார் மறைவு செய்தி கேட்டதும் கலங்கிப் போன ஓ பன்னீர் செல்வம் உடனடியாக பெரிய குளம் விரைந்துள்ளார். அங்கு  ஓ பன்னீர் செல்வத்தின் தாயார் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தாயார் மறைவு அடைந்தது ஓ பன்னீர் செல்வத்திற்கும் மேலும் வருத்தம் அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே பொதுக்குழு வழக்கு தீர்ப்பு பின்னடைவாக அமைந்தத நிலையில், இன்று தாயார் மறைவு அடைந்த செய்தி ஓ பன்னீர்செல்வத்தை கலங்க வைத்துள்ளது.

பழனியம்மாளுக்கு ஓ பன்னீர்செல்வம், ஓ ராஜா, ஓ சண்முகசுந்தரம், ஓ சுசேந்திரன், ஓ பாலமுருகன் என 5 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். பழனியம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நாளை சொந்த ஊரான பெரிய குளத்தில் நடைபெற உள்ளது.