சென்னை:  தமிழகத்தில் முதல்முறையாக 2 பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சை யானது,  கழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர்  தலைமையில்  நடைபெற்றுள்ளது.

நவீன காலத்தில் குழந்தை பேறு என்பது எட்டாக்கனியாக மாறி வருகிறது.  நவீன கால யுவதிகள், தாய்மை அடையாமலே குழந்தை பேறு (நயன்தாரா போல )  பெறவே ஆசைப்படுகின்றனர். இதுமட்டுமின்றி, பணி நிமித்தமாக இளைய தலைமுறையினர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதால், குழந்தை பெறுவதிலும், தாம்பத்யத்திலும் ஆர்வமின்றை மேலோங்கி வருகிறது. இதுமட்டுமின்றி பலருக்கு பல்வேறு உடல் உபாதைகள் மற்றும், உணவு பழக்க வழங்கங்கள் காரணமாக குழந்தை பெற முடியாத நிலையும்  அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக இந்த கால இளம்பெண்கள்,  செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால்தான் நாடு முழுவதும் குழந்தையின்மை சிகிச்சை என  ஏராளமான மருத்துவமனைகள் திறக்கப்பட்டு, கூவி கூவி குழந்தை  உருவாக்க டிரிட்மென்ட் கொடுக்கிறோம் என்று கூறி வருகின்றன.

இந்த நிலையில், கர்ப்பபை பிரச்சினை காரணமாக, குழந்தை பெற முடியாத இரு பெண்கள், அதாவது தமிழநாடு மற்றும் ஆந்திராவைச்சேர்ந்த  இரு இளம்பெண்கள் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில்,  பிறவியிலேயே இருவருக்கும் கர்ப்பப்பை இல்லாமல் போனதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையை கண்டறிந்தனர். இருந்தாலும், அந்த பெண்களுக்கு, கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகியவை நல்ல நிலையில் இருந்தது ஆய்வில் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களுக்கு  கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர். அவர்கள் இருவரும் 54 மற்றும் 56 வயதுடையவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள்.  ஆனால், அவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருக்கிறதா என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது கர்ப்ப பையை எடுத்து இளம்பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் இணைப்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து,  அவர்களுக்கு  குறிப்பிடப்பட்ட நாளில்  அறுவை சிகிச்சை நடைபெற்றது. தானம் செய்யும் பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டு இரண்டு பெண்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது.

இந்த கர்ப்பபை மாற்று அறுவை  சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் மேற்கொண்டார். அவரது தலைமையில் மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். இதையடுத்து,  இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இந்த மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை கருவுறும் தன்மை பெற்றிருக்கும் என கூறியுள்ள மருத்துவர்கள்,  அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் கருமுட்டையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக்கப்படும் என்றும்,  குழந்தை முழுமையாக வளர்ந்த பின்னர்,   ஆபரேசன் மூலம் பிரசவம் செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் முதல் முறையாக தனியார் மருத்துவமனையில்,  கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.