“புட்-ப்ரோ” எனும் உணவு பதப்படுத்தும்துறை சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சென்னையில் இன்று துவங்கியது.

சி.ஐ.ஐ. நடத்தும் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி 7ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது.

 

இன்று காலை நடைபெற்ற துவக்க விழாவில் அமைச்சர் ஆர். சக்கரபாணி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

தமிழக முதலீட்டு வழிகாட்டி நிறுவனமான “கைடன்ஸ் தமிழ்நாடு” துறையின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி, ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டு உணவு பதப்படுத்தும் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

உணவு பதப்படுத்தும்முறை, பேக்கேஜிங், தொழில்நுட்பம், உணவு பொருட்கள், பாரம்பரிய உணவு, குளிர் சேமிப்பு, போக்குவரத்து, குளிரூட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சார்ந்த 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

எண்ணெய் இல்லாமல் பாப்கார்ன், அப்பளம், இறால், உள்ளிட்ட பொருட்களை பொரிக்கும் வீட்டு பயன்பாட்டுக்கான இயந்திரம். சமயலறையில் வைத்துக்கொள்ள கூடிய வேர்க்கடலை, எள் ஆகியவற்றில் இருந்து எண்ணெய் பிழியும் சிறிய இயந்திரம். தவிர கேன்டீன்கள், ஹோட்டல்களில் உணவு தயாரிக்கத் தேவையான இயந்திரங்கள் என அனைத்தும் ஒரே அரங்கில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.