சென்னை,

சென்னை மெரினா கடற்கரையோரம் உள்ள அரசு அலுவலங்கள் உள்ள எழிலகம் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக காலையில் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் பரபரப்பு அடைந்தனர்.

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை எதிரே எழிலகம் அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலான அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், அதிகாரிகள், உயர் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த வர்தா புயலின் காரணமாக எழிலகம் வளாகத்தில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. அதை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள் அதை அப்புறப்படுத்தாமல், வளாகத்தின் ஒரு பகுதியில் சேமித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலையில் அந்த மரக்கிளைகள் அடங்கிய குப்பையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக பாதுகாவலர் தீயணைப்பு துறைக்க தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வர்தா புயலின்போது சேதமடைந்த மரங்களை அப்புறப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள் அதை அந்த பகுதியில் ஒரு இடத்தில் சேமித்தே வைத்துள்ளனர்.

கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்பு நெசப்பாக்கம் பகுதியில் இதேபோல் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடனடியாக சேமித்து வைக்கப்பட்டுள்ள மரங்கள் மற்றும் கிளைகளின் குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்லையேல் இதுபோல் பெரும் தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுக்க முடியாது.