சர்கார் பட விவகாரம்: இறுதியாக வாய் திறந்தார் ஏ.ஆர். முருகதாஸ்

சர்கார் படக்கதையை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் திருடிவிட்டார் என்று சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில் முதன் முறையாக இது குறித்து அவர் கருத்து தெரவிதிருக்கிறார்.

விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் திரைப்டம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில், அப்படத்தின் கதை, தன்னுடைய ;செங்கோல் கதையின் காப்பி என்று வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

இது குறித்து திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் புகார் அளித்தார். அச்சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் இது குறித்து விசாரித்தார். இறுதியில், “ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் படத்தின் கதையும், வருண் எழுதிய செங்கோல் கதையும் ஒன்றுதான்” என்று அறிவித்தார்.

மேலும், “புகார் வந்த பிறகு  இருதரப்பினரையும் விசாரித்தோம். முருகதாஸிடம் அவருடைய கதையை கேட்டோம். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்ததில் கதையின் முக்கியமான கரு ஒன்றாகவே இருந்தது. அதனால், இது குறித்து பேசி முடிக்கவே விரும்பினோம்.  ஆனால், முருகதாஸ் அதற்கு மறுத்துவிட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இதுவரை மவுனமாக இருந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“விஜய்யுடன் ஒவ்வொரு முறையும் படம் பண்ணும் போதும் பிரச்னை வருகிறது. இது எனக்கு மட்டும் கிடையாது. விஜய் உடன் எந்த இயக்குநர் படம் உருவாக்கினாலும் இந்தப் பிரச்னை வருகிறது. மிகப்பெரிய நடிகரின் படம் என்பதால் இதனை தொட்டு பெயர் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்  மிகவும் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார். இரண்டு கதையும் ஒன்று என்றால், என் கதையை படித்தார்களா?. அதாவது என்னுடைய முழுக் கதையை, பவுண்டடு ஸ்கிரிப்டை பாக்யராஜ் படித்தாரா? இல்லையா?. என்னுடைய பவுண்டடு ஸ்கிரிப்டை நான் இதுவரை அவர்களிடம் தரவே இல்லை. மூலக் கதைக்கான ஸ்கிரிப்டை மட்டுமே பெற்றுச் சென்றார்கள். ஒன்று என்னுடைய முழுத் திரைக்கதையையும் படிக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் படத்தை பார்க்க வேண்டும். நான் படத்தை காட்டுவதாக சொன்னேன். ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. வெறும் சினாப்சிஸ் கதையை மட்டும் வைத்துக் கொண்டு கருத்து சொல்வது எவ்வளவு பெரிய தவறு. எனக்கு எவ்வளவு பெரிய தண்டனையை அளித்திருக்கிறார்கள்.

முதல்வரின் மறைவு, கூகுள் சிஇஓ பற்றி எனத் தற்காலத்தில் நடக்கக் கூடியதை வைத்து நான் படம் எடுத்திருக்கும் நிலையில், 2007 இல் பதிவு செய்யப்பட்டுள்ள கதையும் இதுவும் எப்படி ஒன்றாக இருக்க முடியும். நேர்மையாக பணியாற்றிய எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை?

செங்கோல் கதை எழுதிய வருண் என்பவரை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது. அவர் எப்படி இருப்பார், என்ன வயது என்ற எந்த விவரமும் எனக்கு தெரியாது. இதனை அவரும் ஒப்புக்கொள்வார். வருண் தனது நண்பர் சூரிய கிரணிடம் கதை சொல்லியதாகவும், சூரிய கிரண் என்னுடைய படங்களில் பணியாற்றிய ஸ்டில்ஸ் விஜய் என்பவரிடம் அந்தக் கதையை கூறியதாகவும், அவர் மூலம் எனக்கு கதை வந்ததாகவும் கூறுகிறார். ஸ்டில்ஸ் விஜய் என்பவர் மூலம் தான் கதை என்னிடம் வந்தது என்றால், அவரை நேரில் அழைத்து விசாரித்தார்களா?. போனில் அழைத்து பேசியதாக கூறுகிறார்கள். போனில் பேசி எனக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிடுவீர்களா? நேரில் அழைத்து பேச வேண்டாமா?

13 பேர் கொண்ட கதையாசிரியர்கள் குழுவில் 5 பேர் இரண்டு கதையும் ஒன்று என்கிறார்கள்.  6 பேர் இரண்டும் வெவ்வேறான கதை என்று கூறியுள்ளனர். இருவர் நடுநிலையாக இருந்துவிட்டார்கள். அப்படியிருக்கையில், எப்படி பெரும்பான்மையானவர்கள் இரண்டு கதையும் ஒன்று என்ற முடிவுக்கு வந்ததாக பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை குழுவில் உள்ள மற்றவர்களின் ஒப்புதலுடன் வெளியானதா?. இரண்டு கதையும் ஒன்று என்று சொன்னவர்கள் யார் என்று தெரிந்தால் அதில் ஒரு உண்மை புலப்படும். பாக்யராஜ் இந்த விவகாரத்தில் ஏன் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என்றே புரியவில்லை.

பாக்யராஜ் எழுதி இயக்கிய சின்னவீடு படத்தின் கதையும், கலைமணி எழுதி மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை  படத்தின் கதையும் கிட்டதட்ட ஒன்றுதான். சின்ன வீடு படத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு கோபுரங்கள் சாய்வதில்லை படம் வெளியானது. அப்படியானால் நீங்களும் காப்பி அடித்தீர்களா?. இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?” என்று ஏ.ஆர். முருகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: film dierctor AR Murugadoss finally opens up about Sarkar controversy, சர்கார் பட விவகாரம்: இறுதியாக வாய் திறந்தார் ஏ.ஆர். முருகதாஸ்
-=-