டில்லி:

தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கோன ஆணைக்குழுவுக்கு பதிலாக புதிய அமைப்பை ஏற்படுத்தி அதற்கு அதிக அதிகாரம் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களிடம் உள்ள சில அதிகாரங்கள் பறிக்கப்படுவதோடு, சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் பறிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கோன ஆணைக்குழுவுக்கு (National Commission for Backward Classes (NCBC)) பதிலாக, புதிய அமைப்பை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணைக்குழு ( National Commission for the Socially and Educationally Backward Classes (NCSEBC)) என அதற்கு பெயரிடப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த அமைப்பு அரசியல் சாசனத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருக்கும். இது, இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் சில ஜாதிகளை மேலும் சேர்க்கவோ, அல்லது பட்டியலில் ஏற்கனவே இருக்கும் ஜாதிப் பிரிவுகளை நீக்கவோ அதிகாரம் கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய அமைப்பின் மூலம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை முடிவு செய்யும் அதிகாரமும், பொறுப்பும் மத்திய அரசிடமிருந்து, நாடாளுமன்றத்திற்கு முற்றிலுமாக மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

மேலும், இதர பிற்பட்டோர் பட்டியலைத் தீர்மானிப்பதில் மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரம் முற்றிலுமாக பறிக்கப்படும்.

மொத்தத்தில், இதர பிற்பட்டோர் பட்டியலில் சில (ஜாட் போன்ற) உயர்நடுத்தட்டு சாதியினரையும், வருவாய் அடிப்படையில் மேல் சாதியினரையும் (பிராமணர்கள்) சேர்ப்பதற்கான முக்கியத் திருத்தங்கள் இந்த புதிய அமைப்பில் செய்யப்படும் என தெரிகிறது.

எஸ்சி, எஸ்டி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மற்ற பிரிவினருக்கான ஒதுக்கீட்டு வரையறைகளிலும் தலையிடுவதற்கான அதிகாரம் இந்த புதிய அமைப்புக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதற்கான முக்கிய அரசியல் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன. ஏனென்றால், புதிய அமைப்பு சாதி ரீதியாக பிற்படடுத்தப்பட்டோருக்கான ஆணைக்குழுவாக இனி இருக்காது. மாறாக, சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பாகவே அது இருக்கும்.

ஆகவே தற்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பல பறிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.