பொய்க்குற்றச்சாட்டுக்கள்!: ஈஷா மையம் விளக்கம்

கோவை அருகில் செயல்படும் ஈஷா யோகா மையம் காட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்று அம்மையம் மறுத்துள்ளது.

இத குறித்து ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மார்ச் 2017 இறுதியாண்டை முன்னிட்டு, தமிழக பொருளாதார பிரிவைப் பற்றி இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசிற்காக வரையப்பட்ட அவரது கண்ணோட்டமாகும். இதுகுறித்து பொருத்தமான வகையில் பதில் அளிப்பது தமிழக அரசின் பொறுப்பு. இந்த விஷயத்திற்குள் தேவையில்லாமல் ஈஷா அறக்கட்டளையின் பெயரையும் சில விரோத எண்ணம் கொண்ட குழுவினர் இழுத்து விட்டிருக்கின்றனர். அதனை வைத்துக்கொண்டு பொய் குற்றச்சாட்டுக்களையும் புனைந்துள்ளனர்.

குற்றச்சாட்டு ஒன்று: ஈஷா வன நிலத்தை ஆக்கிரமித்துள்ளது

பதில்:ஈஷா யோக மையம் இதன்மூலம் அறுதியிட்டு கூற விரும்புவதெல்லாம், அது வனத்தையோ அல்லது ஆதிவாசி நிலத்தையோ அல்லது வேறு வகையான நிலங்களையோ ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ஈஷா யோக மையம் வன நிலத்தில் கட்டப்படவில்லை. ஈஷா யோக மையத்திற்கு சொந்தமான பட்டா நிலத்தில் மட்டுமே மையம் கட்டப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு, தமிழக வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதனை சரிபார்த்தபின், ஈஷா மையம் முழுக்க முழுக்க பட்டா நிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது என்றும், வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும் தெள்ளத் தெளிவாக பதிவுசெய்துள்ளனர். (ஆவணக் குறிப்பு எண்: CFCIT/07/2013) இதுபோல் போலிக் குற்றச்சாட்டுக்களை நினைத்த போதெல்லாம் தொடர்ந்து சுமத்திக் கொண்டே இருப்பதை விடுத்து, உரிய நிறுவனம் ஒன்று இதுகுறித்து புலன்விசாரணை செய்வது சாலப்பொருத்தமாக இருக்கும்.

குற்றச்சாட்டு இரண்டு: ஈஷா யானை வலசைப் பாதையில் கட்டப்பட்டுள்ளது

பதில்: இல்லாத யானை வலசைப் பாதையை உருவாக்கிட எண்ணும் அற்ப முயற்சி இது. தமிழக வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஈஷா யோக மையத்தின் கட்டிடங்கள் யானை வலசைப் பாதையில் அமையவில்லை என்பதை சரிபார்த்து உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி (RTI) அனைவரும் தெரிந்துகொள்ளலாம், கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணம் அப்படிப் பெறப்பட்டது, ஆவணக் குறிப்பு எண்: WL5/35913/2013. மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகமும், இந்திய வனவிலங்கு அறக்கட்டளையும், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியமும், யானைகள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் பல்வேறு விஞ்ஞானிகளும், ஈஷா மையம், யானை வலசைப் பாதைக்கு அருகில்கூட இல்லை என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

குற்றச்சாட்டு மூன்று: ஈஷாவிடம் மலைத்தள பாதுகாப்பு குழுமத்தின் (HACA) அனுமதி இல்லை

பதில்: ஈஷா அறக்கட்டளை எழுப்பியுள்ள அத்தனை கட்டிடங்களுக்கும், ஜுலை 2017ஆம் ஆண்டிற்கு முன்னமே, 58வது HACA சந்திப்பில், மலைத்தள பாதுகாப்பு குழுமம் அனுமதி வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் தடையின்மைச் சான்றிதழை வழங்கிய பின்னரே HACA தன் ஒப்புதலை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல ஆண்டுகளாகவே, தொடர்ந்து இதே குற்றச்சாட்டுக்களை எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல், உண்மையும் இல்லாமல் உருவாக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த கட்டுக்கதைகள் நிறுத்தப்பட வேண்டும், புனைவுகளை விடுத்து உண்மை நிலைநிறுத்தப்பட வேண்டும்” – இவ்வாறு ஈஷா மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 




English Summary
False accusations !: Isha's interpretation