முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அதிபர் பதவியேற்புக்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வன்முறையை தூண்டும் பதிவுகளை வெளியிட்டதற்காக அவரது முகநூல் பக்கம் முடக்கப்பட்டது.

டிரம்பின் பேஸ்புக் பக்கத்தை மீண்டும் அனுமதிப்பது குறிதது ஆய்வு செய்த அந்நிறுவனத்தின் குழு இது அதற்கான உகந்த நேரமல்ல என்று பரிந்துரைத்தைத் தொடர்ந்து அவரது முகநூல் பக்கம் இரண்டான்டுகளுக்கு முடக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

கேப்பிட்டல் ஹில் வளாகத்தில் நிகழ்ந்த வரலாறு காணாத வன்முறைக்கு இவயது பதிவுகளே முக்கிய காரணமாக இருந்ததால் 2023 ம் ஆண்டு ஜனவரி 7 வரை இவரது பக்கம் முடக்கி வைக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனத்தின் துணை தலைவர் நிக் கிளெக் தெரிவித்தார்.

இரண்டாண்டுகள் கழித்து அன்றைய சூழலில் அவரது செயல்பாடுகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் இருப்பதாக தோன்றினால் மட்டுமே அமெரிக்காவின் முன்னாள் அதிபருக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்று அந்த சமூக வலைதள நிறுவன அதிகாரி தெளிவுபடுத்தினார்.

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை விதிகளுக்கு புறம்பானது என்று மட்டும் கூறிய டொனால்ட் டிரம்ப், 2024 ம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட்டு அதிபராவேன் என்று சூளுரைத்திருக்கிறார்.