பரிட்சாபே சர்ச்சா என்ற பெயரில் 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஆற்றிவரும் சம்பிரதாய உரை ஆறாவது முறையாக இந்த ஆண்டும் நடைபெற்றது.

இந்த உரையாடலில் ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள் (Child with Special Needs – CwSN) குறித்தும் பரிட்சையை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தோ எந்த ஒரு முக்கிய ஆலோசனையும் வழங்கப்படவில்லை.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் (Learning Disorder / Dyslexia) தவிர மாற்றுத் திறன் படைத்த குழந்தைகள் மற்றும் சிறப்புச் சிறார்களுக்கு என்று NIOS உள்ளிட்ட சிறப்பு பாடத்திட்டம் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமடைந்து வருகிறது.

சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பாடத்திட்டத்தில் பயிலும் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் இந்த NIOS சிறப்பு பாடத்திட்டங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு சி.பி.எஸ்.இ. கல்வி நிலையங்கள் வெறும் வழிகாட்டு நிலையங்களாகவும் கல்வி ஆலோசனை மையங்களாகவும் மாறி வருகிறது.

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்பு அனுமதியுடன் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட முறையான பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில்வது எப்படி என்பதும் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறுவது எப்படி என்பது குறித்தும் சரியான வழிகாட்டுதலோ அரசாணையோ சுற்றறிக்கை குறித்த விவரம்  இல்லாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தவறான வழிகாட்டுதலால் திணறி வருகின்றனர்.

மேலும் பள்ளிகளின் பரிந்துரையின் பெயரில் குழந்தைகளை மதிப்பீடு செய்யும் மருத்துவக் குழுவுடன் இணைந்து செயல்பட கல்வி நிலைய அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ கல்வித் துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க தவறியதால் மருத்துவக் குழுவின் மதிப்பீடு மாணவர்களுக்கு மட்டுமே என்ற ஒருதலைப்பட்ச செயல்பாடு ஆசிரியர்களுக்கு அனுகூலமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கும் பரிட்சா பே சர்ச்சா நிகழ்ச்சியில் கூட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் CwSN மாணவர்களுக்கான பிரத்யேக ஆலோசனை ஏதும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

பிபிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் Pariksha Pe Charcha (PPC) நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தல்கோத்தரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 120 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் காலா உத்சவ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற 80 மாணவர்கள் என மொத்தம் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

தவிர நாட்டின் முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  வீடியோ கான்பரன்சிங் மூலம் சுமார் 2400 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பிரதமருடன் கலந்துரையாடினர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மொத்தம் சுமார் 38 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததாகவும் இது கடந்த ஆண்டை விட இருமடங்காக உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. மாநில பாடத்திட்டத்தில் பயின்ற சுமார் 16 லட்சம் பேரும் இந்த ஆண்டு  விண்ணப்பித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும் இந்த புத்துணர்ச்சி முகாமில், அதிக பதட்டத்தில் இருக்கும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு (CwSN) தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனை வழங்க எந்த ஒரு கவனமும் செலுத்தவில்லை.

இந்த நிலையில், இந்த ஆண்டு முதல் CwSN மாணவர்கள், தேர்வு எழுத தங்களுக்குத் தேவையான சலுகைகளை சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் அதற்கான இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்து பெறமுடியும் என்றும் அதற்கு 22-12-2022 முதல் 30-12-2022 வரை 9 நாட்கள் மட்டுமே காலஅவகாசம் வழங்கி 21-12-2022 ல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது சிபிஎஸ்இ தேர்வுப் பிரிவு.

அரையாண்டு தேர்வு முடிந்து குளிர்கால விடுமுறை வழங்கிய நிலையில் இந்த சுற்றறிக்கை குறித்து பல பள்ளிகளுக்கு தெரியாமலே போனது தெரிந்த பள்ளிகளும் ஒன்றிரண்டு குழந்தைகளுக்காக எந்த வித முன்னெடுப்பும் செய்யாமல் முடங்கி இருந்தது.

இதையும் தாண்டி சில பள்ளிகள் அரசியல்வாதிகளைப் போல் தங்கள் வாய்ஜாலாக்கில் பெற்றோர் மீது பழிசுமத்தி அனுப்பியது.

பிள்ளைகளை பரிட்சை எழுதவைக்கக் காத்திருந்த பெற்றோர்கள் மந்தகதியில் இயங்கிய பள்ளிகளால் தங்கள் குழுந்தைகளின் இத்தனையாண்டு படிப்பு வீணாவதை நினைத்து வருத்தத்தில் உள்ளதோடு மதிப்பீட்டிற்காக பள்ளிக்கும் மருத்துவ குழுவுக்கும் நடையாய் நடந்து செருப்பு தேய்ந்தது தான் மிச்சம் என்று புலம்பி வருகின்றனர்.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் எடுக்க சுற்றறிக்கை அனுப்பிய மத்திய அரசு இந்த குழந்தைகளுக்கான சிறப்பு சலுகைகள் மற்றும் அதை பெறுவதற்கான வழிகாட்டுதலை முறையாக வழங்கவில்லை.

பள்ளியளவில் வழிகாட்டு அல்லது ஆலோசனை குழுவோ அல்லது பொறுப்பாளரோ நியமிப்பதற்குப் பதிலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் தொலைக்காட்சியில் தோன்றி தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஒரு நிகழ்ச்சியை நடத்துவது எந்தவிதத்தில் பலனளிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பரிட்சையை எதிர்கொள்ள மாணவர்களிடம் உள்ள அச்சத்தை போக்க நடத்தப்படும் இந்த பிபிசி ஈவென்ட்டுக்கு பதிலாக பள்ளி அளவிலோ, மாவட்ட அளவிலோ ஆலோசனை அல்லது வழிகாட்டுதல் குழுவை நியமித்து NIOS உள்ளிட்ட அனைத்து பாடத்திட்ட மாணவர்களின் கல்விக்காகவும் செயல்படுவதை மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்கள் வலியுறுத்துகின்றனர்.