பெங்களூரு

ந்தி  திணிப்பைக் கண்டித்தும் இந்தி மொழி நாள் கொண்டாட்டத்தை எதிர்த்தும் இன்று கர்நாடகாவில் போராட்டம் நடந்துள்ளது.

ஒவ்வொரு வருடம் மத்திய அரசு செப்டம்பர் 14 ஆம் தேதியை இந்தி மொழி நாள் என அறிவித்து இந்தி மொழியின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி வருகிறது.  இதைத் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன.  இதையொட்டி சமூக வலைத் தளங்களில் #StopHindiimposition என்னும் ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது.

கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு.. ஹூப்ளி, ஷிமோகா போன்ற நகரங்களில் கன்னட அமைப்புக்களின் கூட்டமைப்பினர் இந்தி எதிர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டம் பெங்களூருவில் மைசூர் வங்கி சதுக்கத்தில் நடந்தது.  இதில் பங்கேற்ற கன்னட அமைப்பினர் இந்திக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி, இந்தி மொழியில் உள்ள பதாகைகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்த போராட்டத்துக்கு மஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.  தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், “இந்தியாவில் பல மொழிகள் பேசும் போது இந்திக்கு மட்டும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? ஒரு போதும் மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஏற்க முடியாது. மஜத இந்தித் திணிப்பை எதிர்க்கும் அதே வேளையில், கன்னட மொழியின் உரிமையைப் பாதுகாப்பதிலும் முன்னணியில் இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.