சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று எம்எல்ஏவாக பதவி ஏற்கிறார். அவருக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகு எம்எல்ஏவாக இருந்த  திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி  27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில்,  திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , அதிமுக சார்பில்  தென்னரசு, தேமுதிக கட்சி சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்  66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் சபாநாயகர் அறையில், எம்.எல்.ஏவாக பதவியேற்கிறார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஏற்கனவே, கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக  இருந்துள்ளார். தற்போது, 38 ஆண்டுகளுக்கு பின்பு, தனது மகன் மரணத்தைத் தொடர்ந்து, மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளார்.