சென்னை: ஈரோடு கிழக்கு தேர்தலில் வெற்றி நிச்சயம் என ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையடுத்து, இன்று சென்னை வந்த இவிகேஎஸ், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வருடனான சந்திப்பு முடிந்ததும்,   செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்பினர். அவர்களது விருப்பத்துக்கு அடிபணிந்து நான் போட்டியிடுகிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே திமுகவினர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அமைச்சர்கள் நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் பிரசாரத்தை மேற்கொண்டதற்கு நன்றி. தமிழ்நாடு முதல்வ மு.க.ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்த நம்பிக்கை காரணமாக இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். முதலமைச்சர் ஸ்டாலினை பிரசாரத்திற்கு அழைத்துள்ளேன் என்றவர்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியையும் சந்திக்க இருக்கிறேன்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதற்கு முதலமைச்சர் சம்மதித்துள்ளார்  என கூறிய இளங்கோவன்,   கூட்டணி கட்சியினரான கம்யூனிஸ்ட் கட்சி, வைகோ, திருமாவளவன் , முஸ்லீம் லீக் கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.

அதே போல, மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அவர்களையும் , வேல்முருகன் அவர்களையும் சந்தித்து பேச உள்ளோம். அதற்காக கமல்ஹாசன் தரப்பிடம் நேரம் கேட்டுள்ளோம்.

ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின்  வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கிறது. திமுக கூட்டணி வலுவான கூட்டணி. முதல்வர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் மேலிடமான ராகுல், சோனியா காந்தி, கார்கே ஆகிய முக்கிய தலைவர்களின் ஆலோசனை படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும். அதே போல, இந்த தொகுதியை திமுக காங்கிரஸுக்கு ஒதுக்கியதே பெரிய விஷயம். திமுக கூட்டணியுடன் கலந்து பேசி இருப்பதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.