சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவர் நடராஜனை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தற்கு, அக் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ஊழல்வாதி என்று நீதிமன்றத்தால் முத்திரை குத்தப்பட்டு சிறையில் இருப்பவரக் சசிகலா. அவரது கணவர் நடராஜனை திருநாவுக்கரசர் சந்தித்தது மிகப்பெரிய தவறு. நடராஜன் மீதும் குற்றச்சாட்டுக்கள் இருப்பது கவனிக்கத்தக்கது” என்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில்,  திருநாவுக்கரசர் செயல்பாடு சரியில்லை. அவர் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனால் அவரது பிறந்த நாளை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடியது தவறான செயலாகும். இதனை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் அப் பேட்டியில், “காங்கிரஸ் கட்சிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். இதனஆல் கட்சிக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது.

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ்  ஆட்சியைப் பிடிக்கும். காமராஜர் ஆட்சியை அளிக்கும்” என்றார்.