டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் அதன் விளைவான பணத் தட்டுப்பாடு இன்னும் தொடர்வதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.   அதையொட்டி ரூ.1000க்கு பதிலாக ரூ.2000 நோட்டுக்கள் வெளியிடப்படன.  இந்த நோட்டுக்கள் கடந்த சில மாதங்களாகப் புழக்கத்தில் காணப்படுவதில்லை.    இதற்கு முக்கிய காரணம் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுக்கள் அச்சடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகும்.

பணமதிப்பிழப்புக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள புதிய நோட்டுக்கள் அளவில் சிறியதாக இருந்த போதிலும் அவற்றில் முந்தைய அளவுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளதால் இந்த தாமதம் நேரிடுவதாக ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பாதுகாப்பு அம்சங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம், இன்னும் அனுமதி அளிக்கவில்லை எனவும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.200 மற்றும் ரூ.2000 நோட்டுக்களில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் அமைப்பதில் தாமதம் உண்டாவதால் அவை இரண்டும் போதுமான அளவு அச்சிடப்படுவதில்லை எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.   மேலும் இந்த நோட்டுக்கள் போதிய அளவில் அச்சடிக்கப்படாததால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு மூன்று வருடத்துக்கு பிறகும் பணத்தட்டுப்பாடு உள்ளதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.