நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளற் எஸ். கோவிந்தராஜன் Govindaraj Srinivasan அவர்களது முகநூல் பதிவு:
பவானி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் 2 லட்சம் கன அடி நீர் செல்கிறது. ஈரோடு ஆட்சியரின் முகாம் அலுவலகம் (வீடு) அமைந்துள்ள சம்பத் நகர் பகுதியில் மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை. நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கியதால் குடிநீர் எடுக்க முடியவில்லையாம். கரைபுரண்டு காவிரி ஓடினாலும், கேன் வாட்டர் வாங்கித்தான் குடிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டனர் அதிகாரிகள்.
கடந்த 10 நாட்களில் மட்டும் பல இடங்களில் குடிநீர் கோரி சாலைமறியல், முற்றுகை போராட்டங்கள் நடந்துள்ளன. தொண்டு நிறுவனங்கள் முயற்சி எடுத்து தூர் வாரப்பட்ட குளங்கள் அனைத்தும் நீர் இன்றி வறண்டு கிடக்கிறது. பவானி ஆற்றின் உபரி நீரை இந்த குளங்களுக்கு கொண்டு செல்ல எந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.
பவானி ஆறு காவிரியுடன் இணையும் பவானி கூடுதுறை பகுதியில் பவானி ஆறே தெரியாத அளவுக்கு, முழுக்க ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீரைத் திறக்கபடுவதால், மக்களை உஷார் படுத்திய மாவட்ட நிர்வாகம், ஆகாயத்தாமரைகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆற்றில் நீர் தடைபட்டு, குடியிருப்பு பகுதிகளுக்குள்ளூம், விளை நிலங்களையும் பாழ்படுத்தி வருகிறது. இன்று காலை பொதுப்பணித்துறையினர் ஆகாயத்தாமரைகளை இயந்திரம் மூலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகளை கரையில் போடாமல், ஆற்று நீரிலேயே அனுப்பி வைக்கும் அபத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கிருந்து நீரில் பயணிக்கும் ஆகாயத்தாமரை, எந்த இடத்தில் அடைப்பு ஏற்படுத்தினால் எனக்கு என்ன என்பதே பொதுப்பணித்துறையின் எண்ணமாக இருக்கிறது.
சிஸ்டம் சரியில்லை..!