ஈரோடு: ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட முக்கிய நிர்வாகிகள் சென்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

அதைத்தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 31ந்தேதி தொடங்கி இன்றுடன் (பிப்ரவரி 7ந்தேதி ) முடிவடைகிறது. இந்த . இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அமமுக கட்சிகளும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. அதிமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, எடப்பாடி தரப்பு வேட்பாளரரே அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார். அதன்படி, அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று தனதுவேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 3மணியுடன் நிறைவடையும் நிலையில், இன்று மதியம் தென்னரசு வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஈரோடு இடைத்தேர்தலில் இதுவரை,   59 பேர் மனு தாக்கல் செய்து உள்ள நிலையில், தற்போது 60வது நபராக அதிமுக வேட்பாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, நாளை,  வேட்பு மனுக்கள்  பரிசீலனை செய்யப்படுகிறது.

வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு பிப்ரவரி 27ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில்,  286 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 286 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 310 சரிபார்ப்பு இயந்திரங்களும் என 882 இயந்திரங்கள் தயாராக உள்ளது.