சென்னை:
திமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில் அந்த பாலம் வரும் நான்காம் தேதி முழு பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுகவின் வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு அவரே தன்னிச்சையாக நேற்று ரிப்பனை கட்டி பாலத்தை திறந்து வைத்துள்ளார்.

வரும் நான்காம் தேதி வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் அந்த பாலத்தை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு அந்த பாலத்தை திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக வருவாய்த்துறை அளித்த புகாரின் பேரில் அதிமுக மாவட்ட செயலாளர் பாலத்தை திறந்தது தொடர்பாக அவரது வீட்டிற்கே சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் செய்தது தவறு என எஸ்.ஆர்.கே.அப்பு ஒப்புக்கொண்டதால் அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வேலூர் மாவட்டம்,காட்பாடியில் பழுதடைந்த ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர், இச்சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் நூதன முறையில் போராட்டம் நடத்திய வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அப்பு அவர்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள இந்த விடியா திமுக அரசின் அடக்குமுறை நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.