சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் 15லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப் படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 5ந்தேதி (பிப்ரவரி 2023) கோவை  ‘கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தில் திறன்மேம்பாட்டு திட்டம் குறித்து கோவை தொழில் அமைப்பினருடன் மத்திய எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன்மேம்பாட்டு திட்ட இணைஅமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ஆலோசனை நடத்தினார்.  அப்போது தமிழ்நாட்டில், 8 ஆயிரம் ஸ்டார்ட்அப் தொழில்கள் உருவாகியுள்ளன. தமிழகத்தில் 3லட்சம் பேருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முன்மாதிரி திட்டமாக கோவையில் ஒரு சிறப்பு திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து திறன்மேம்பாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; குறுகிய கால பயிற்சி நிறுவனங்களில், தரமான பயிற்சிகள் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் வாயிலாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்கு நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெறும் வகையில் முன்னணி தொழில் நிறுவனங்களால் தற்பொழுது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தொடங்கப்பட்ட www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.