சென்னை:  என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என அதிமுக தலைமைமீது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கடுமையான விமர்சனங்களை எழுப்பி தனது உள்ளக்குமுறலை கொட்டியுள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது, சிறையில் இருந்து  விரைவில் விடுதலையாக உள்ள சசிகலாவுக்கு ஆதரிவு தெரிவிக்கும் வகையிலாகவும், இபிஎஸ், ஓபிஎஸ் தலைமைக்கு ஆப்பு வைக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாகவே சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சசிகலா இன்னும் 10 நாட்களில் சிறையில்  விடுதலையாக உள்ளார். அவரது வருகை தமிழகஅரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் கடுமையான அதிர்வலைகளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

அவரது விடுதலையை, ஏற்கனவே மறைந்த ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று பின்னர், பெயில் காரணமாக பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்தபோது, கொடுக்கப்பட்ட வரவேற்பைப் போல, சசிகலாவுக்கும் கொடுக்க அவரது சொந்த பந்தங்கள், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் போன்றவை தீவிரமாக களமறிங்கி உள்ளன.

ஓசூர் முதல் சென்னை வரை அவரை வரவேற்க தயாராகி வருகின்றனர். இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு வருகிறது. சாலை முழுவதும் வண்ண வண்ண பேனர்கள், பிளக்ஸ்கள் வைக்க அனுமதி வாங்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான வாடகை வாகனங்களும் புக் செய்யப்பட்டு உள்ளது. சசிகலாவை பிரமாண்டப்படுத்த அவரது துதிபாடிகள் பணியாற்றி வருகின்றனர்.

சசிகலா வருகை ஏற்கனவே அதிமுகவிலும் சலசலப்பை உருவாக்கி உள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா போன்றவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜேந்திர பாலாஜி கூறும்போது, அ.தி.மு.க.- அ.ம.மு.க.வுக்கு இடையில் நடப்பது தாய் இல்லாத நேரத்தில் நடக்கும் அண்ணன்-தம்பி பங்காளி சண்டைதான். சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அ.தி.மு.க.வை பலப்படுத்தும் முடிவைத்தான் எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவை அம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அழைப்பார்கள். இப்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் சசிகலாவை தாய் ஸ்தானத்துக்கு உயர்த்தி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்து கட்சிக்குள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், இதற்கு காட்டமாக பதில்அளித்த   டி.ஜெயக்குமார்,  இரட்டை இலை சின்னத்தை முடக்க முயன்ற அ.ம.மு.க.வுடன் அண்ணன்- தம்பியாக இருக்க முடியாது. அ.மமு.க.வுடன் நமக்கு எந்த உறவும் இல்லை என்றார். ஆனால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிமுக தலைமை முன்வரவில்லை. இதுவும் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் இதழ் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றோரையும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கொளுத்திப்போட்டார்.  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் குருமூர்த்தி பேசியது, இது பாஜகவின் நோக்கம் என்பதையே காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்து வந்த, ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன், தற்போது வெகுடெண்ழுந்து, தனது மனக்குமுறலை கொட்டியுள்ளர். அதிமுக தலைமைமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ள பூங்குன்றன் சங்கரலிங்கம், தன்னை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கூறியிருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பூங்குன்றன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என் விசுவாசம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. இந்த ஆட்சி அம்மாவின் ஆட்சி. இதில் உரிமை கொண்டாடுவதில் யாருக்கும் பெருமையுமில்லை. அம்மா அவர்கள் கஷ்டப்பட்டு பெற்று தந்த ஆட்சிக்கு என்னால் ஒரு களங்கம் வரக்கூடாது என்பதால் மௌனம் காத்தேன். தை பிறந்து விட்டது. தேர்தலும் நெருங்கிவிட்டது. சிலரின் பேச்சும், விமர்சனங்களும் என் மனதை பெரிதும் பாதித்து வந்தன. அதற்காகவே இந்த மனக்குமுறல்.

அம்மா அவர்கள் ஆசையோடு எனக்கு வாங்கித் தந்த காரை நிறுத்திவிட்டார்கள். ஏன் நிறுத்தினீர்கள் என்று இன்றுவரை கேட்டிருப்பேனா?
கட்சியின் சொத்துக்களான அறக்கட்டளைகள் மூன்றிலும் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு நான் மட்டுமே நிர்வாகி. நான் என்றாவது இதைப் பற்றி பேசி இருப்பேனா?
அதை மாற்றிக் கொடுத்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்றுச் சொன்னார்கள். இதைப் பற்றி என்றாவது வெளியில் சொல்லி இருப்பேனா? அறக்கட்டளை என்னுடையது என்று சொந்தம் கொண்டாடினேனா?
தொண்டர்களின் உணர்வுகளைப் பதிவிடும் போது தலைவர்கள் கோபமாக இருக்கிறார்கள். எதாவது செய்து விடப் போகிறார்கள். வெளியில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள் என்றார்கள். இதுபற்றி நான் யாரிடமாவது விவாதித்தது உண்டா?
தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் நீண்ட நாட்களாகப் பேட்டி கேட்டு வருகிறார்கள். என் பேட்டி கட்சிக்கோ, மற்றவர்களுக்கோ எந்த விதத்திலும் சங்கடத்தை தந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவிர்த்து வருகிறேன்.
எல்லாவற்றையும் அவன் பெயரில் மாற்றுங்கள். அவன் ஒருவனே என் நம்பிக்கைக்குரியவன் என்று அம்மா அவர்கள் சொன்னதை இதுவரை பெருமையாக சொல்லி இருப்பேனா? போயஸ் கார்டன் வீட்டின் சொத்துவரிக்கான படிவத்தில் அம்மா அவர்களுக்கான இடத்தில் என்னை கையெழுத்திட சொன்ன நம்பிக்கை பெற்றவன் நான். அதுவே என் ஆனந்தம். அதுவே என் வெற்றி. அதுவே எனக்குப் போதும்.
மூன்று முறை கழக உறுப்பினர் உரிமை சீட்டிற்கு விண்ணப்பித்த போது என்னுடைய படிவத்தை மட்டும் வாங்க மறுத்தீர்களே, அதைத் தட்டிக் கேட்டேனா? மற்றவர்களுக்கு தெரிவித்தேனா?
உங்களுக்கு தராமல் என் பெயரில் கட்சியின் அறக்கட்டளைகளை அம்மா தந்திருப்பதால் நான் தான் அம்மாவின் வாரிசு என்று அறிவித்தேனா?
யாருக்கும் என்னால் எந்த சங்கடமும் வரக்கூடாது என்பதற்காக கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருக்கும் என்னை பார்த்து ஏளனம் பேச உங்களுக்கு எப்படி மனம் வருகிறது. ஏதோ ஒரு வகையில் என்னிடம் உதவி பெற்றிருப்பீர்கள். நமக்கு உதவியவன் இவன் என்று என்றாவது அழைத்து ஆறுதல் சொல்லி இருப்பீர்களா?
இன்னுமா புரியவில்லை என் விசுவாசம். இதற்குமேல் எப்படி கழகத்திற்கு விசுவாசமாக செயல்படுவது என்று எனக்கும் புரியவில்லை.  சொல்லித்தாருங்கள்.
அம்மாவே இல்லை என்று ஆன பிறகு சொத்துக்கள் எதற்கு? சொத்திலும் ஆசை இல்லை. கட்சியிலும் ஆசை இல்லை. தலைமையில் இருப்பவர் கட்சியை வலிமையாக நடத்த வேண்டும். அதுவே என் ஆசை, வேண்டுதல்.
தலைவராக யாரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு உண்டு.
நீங்கள் நலமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு, யாரிடமும் செல்லாமல் இன்று நிற்கதியாய் நிற்கும் என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்.
ஒற்றுமையாய் இருங்கள். கழகத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இதுவே நீங்கள் எனக்கு செய்யும் மாபெரும் உதவி. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
அம்மாவின் நம்பிக்கை பெற்றதே இந்த ஜென்மத்தில் நான் பெறவெண்டியதை பெற்ற திருப்தி.
கடவுளான அம்மாவிற்கு தெரியும் என் விசுவாசம். என்றும் அந்த உண்மை விசுவாசத்தோடு என் தாயின் வழியில்…
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக தலைமைமீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள பூங்குன்றன்,  இபிஎஸ், ஓபிஎஸ் தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே  இந்த பதிவை தற்போது வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
சசிகலா வரும் 27ந்தேதி தனது தண்டனை முடிந்து வெளியே வருகிறார். அவரை வைத்து, அதிமுகவில் சதிராட்டம் போட பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பிரதிவுபகாரமாக, அவர்மீதான வருமான வரித்துறை வழக்குகளை நீர்த்துப்போகச் செய்வதாக பாஜக உறுதி அளித்திருப்பதாகவும், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஏற்கனவே அ.தி.மு.க. தலைமையை, பாஜக மிரட்டி பணிய வைத்து, இயக்கி வருகிறது என திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதன் பயனாகத்தான்,  மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எடப்பாடி அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில்  தொகுதி பங்கீடு தொடர்பாக  அதிமுக பாஜக இடைணுய சலசலப்பு நீடித்து வருகிறது. இதனால், அதிமுகவை மீண்டும் பிளவுபடுத்தி, இரட்டை இலையை முடக்க  பாஜக முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள்  பரவி வருகின்றன.  இதற்கு, சசிகலாவை உபயோப்படுத்த திட்டமிட்டு வருகிறதோ என்ற எண்ணங்களும் அரசியல் பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது.

இதுபோன்ற சூழலில், மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் முகநூல் பதிவு, அதிமுக மேல்மட்டத்தில் மேலும்  பற்றியெரியத் தொடங்கி உள்ளது.