துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்ட தனது தம்பியை பாதுகாக்கும் 7 வயது சிறுமி தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இயற்கை ஏன் அந்நாட்டு மக்களுக்கு இவ்வளவு பெரிய சோகத்தை கொடுத்துள்ளது என எண்ணத் தோன்றுகிறது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 6, 2023) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதி தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது மத்திய துருக்கியில்  நேற்று 2-வது நாளாக நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஏராளமான கட்டிங்கள் நொறுங்கியுள்ளதால், அதில் வசித்து வந்தவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. ஆங்காங்கே மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், அங்கு பெய்து வரும் பனிப்பொழிவால் மீட்புபணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இநத் நிலையில்,  ஐக்கிய நாடுகள் பிரதிநிதி முகமது சபா, புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சிறுமி ஒருவர் தனது தம்பியை பாதுகாத்துக்கொண்டு, கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ள புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.  இதுதொடர்பாக அவரது பதிவில்,  7வயது சிறுமி, தனது தம்பியின் தலையில் சேதமடைந்த கட்டடம் படாதாவாறுதனது கையால் தடுத்துள்ளார். 17 மணி நேரம் இதேபோன்று கைகளை வைத்து தனது தம்பியை அந்த சிறுமி பாதுகாத்துள்ளார். அதிர்ஷ்டவசமாக இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  வைரலாகிறது. அவர்களை மீட்ட மீட்பு படையினரையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதுபோன்று இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானவர் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கும், தற்காலிக முகாம்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அங்கு எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் துருக்கிக்கு உதவி இந்தியா உள்பட உலக நாடுகள் நேசக்கரம் நீட்டியுள்ளன. நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க ஐரோப்பிய ஒன்றியம் மீட்பு படையினரை அனுப்பியுள்ளது. இந்தியா தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து மோப்ப நாய்களுடன் 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது. அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.