சென்னை: தமிழ்நாட்டில் நாளை (19ந்தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று வரை (17ந்தேதி) விதிகளை மீறியதாக  670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும்  மாநில தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, வீதிகளை மீறி செயல்பட்டால் 18004257072, 18004257073, 18004257074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு  புகார் அளிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (பிப் 19)  648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு  வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் காரணமாக மாநிலம்  முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், அனல் பறந்த பிரசாரங்கள் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அளிக்கும் புகாரகளைப் பெற  சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் இந்த புகார் மையத்தில், பலரும் புகார்களை தெரிவித்து வருகின்றனர். இங்கு வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு, வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல், மாதிரி நடத்தை விதிகள், சுவர் விளம்பரம், வேட்பு மனு தாக்கல், சின்னம் ஒதுக்கீடு, தேர்தல் விதிமீறல் தொடர்பாக  670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக  மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  இந்த புகார்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிமீறல் நடந்தால், அதுகுறித்து  18004257072, 18004257073, 18004257074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு  புகார் அளிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.