நாகர்கோவில்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன், துரை வையாபுரிக்கு,  ம.தி.மு.க.வில் பொறுப்பு வழங்கி இருப்பது வைகோ எடுத்திருக்கும் ராஜ தந்திரமான முடிவாகும், மதிமுக ஆட்சிக்கு வரும் கட்சி அல்ல, போராட பிறந்த கட்சி என்றும் நாஞ்சில் சம்பத் கூறி உள்ளார்.

வைகோ மகன் மதிமுக செயலராக நியமனம்  : வைகோ விளக்கம்

இலக்கிய மேதையான நாஞ்சில் சம்பத், அரசியல் மீதான ஆர்வத்தாலும், வைகோ மீதான நன்மதிப்பாலும் ம.தி.மு.க.வில் இணைந்து அரசியல் செய்து வந்தார். அவருக்கு வைகோ கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததும், அங்கிருந்துவிலகி, ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு, ஜெயலலிதா இன்னோவா கார் பரிசளித்து கவுரப்படுத்தினார். இதனால் இன்னோவா சம்பத் என்று அழைக்கப்பட்டார். ஜெ.வுக்கு காவடி தூக்கினார்.

ஆனால், ஜெ. மறைவுக்கு பிறகு, இரட்டை தலைமையுடன் ஒத்துப்போகாத நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் கட்சியில் இணைந்தார். அங்கும் அவருடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, அரசியல் விட்டு ஒதுங்குவதாகவும், இனிமேல் இலக்கியத்தில் கவனம் செலுத்தப்போவதாக கூறி, சொந்த மாவட்டமான குமரி மாவட்டத்தில் தஞ்சம் புகுந்தார்.

இருந்தாலும் இடையிடையே அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வந்தவர், இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில்  தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பேசினார். இதனால், நாஞ்சில் சம்பத் விரைவில் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வைகோவையும், அவரது மகனையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதிமுக குறித்து கருத்து தெரிவித்தவர்,  அ.தி.மு.க.வை கைப்பற்றும் இடத்தில்தான் சசிகலா உள்ளார். அவரை யாரும் கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று சசிகலாவுக்கு ஆதரவாக கூறியவர்,

மதிமுக குறித்து கூறும்போது, வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு  ம.தி.மு.க.வில் பொறுப்பு வழங்கி இருப்பது வைகோ எடுத்திருக்கும் ராஜ தந்திரமான முடிவு என்று புகழாரம் சூட்டினிர். கட்சி சுமையை வைகோ பகிர்ந்து கொள்வதற்காகவும், ம.தி.மு.க.விற்கு புத்துயிர் ஊட்டுவதற்காகவும் துரை வைகோ ஒரு கருவியாக இருப்பார்.

திராவிட இயக்கத்தின் கோட்டை தமிழகம் என்பதை நிரப்ப ம.தி.மு.க. முக்கிய பங்கு வகிக்கும். அவரது கட்சிக்கு அவரது மகனை  நியமிக்காமல் வேறு யாரை நியமித்திருக்க முடியும்? என எதிர் கேள்வி எழுப்பியவர், வாரிசு அரசியல் என்பது வேறு, வரலாற்று அரசியல் என்பது வேறு. ம.தி.மு.க. அதிகாரத்திற்கு வரும் கட்சி அல்ல. போராட பிறந்த கட்சியாகும். போராட்டக்களத்தில் துரை வைகோவிற்கு நான் துணை நிற்பேன்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.