சென்னை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழக அரசு ப்ல தடைகளை விதித்துள்ளது.   பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.   சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அருகில் உள்ள நீர்நிலைகளில் தனிநபராகச் சென்று சிலையைக் கரைப்பதற்கு அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  தவிர அரசின் வழிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து, சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. காவல்துறையால் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநகர காவல் ஆணையர் தலைமையில் 20 ஆயிரம் காவல்துறையினர் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புக்காகப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் ஏற்கனவே பதட்டமான பகுதிகள் என அறியப்பட்ட புளியந்தோப்பு மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.