சென்னை

மிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி  வரை சென்னையில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுகிறது

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதையடுத்து அரசு மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் தடை விதிக்கப்பட்டன.   அவசரக் கால பயன்பாட்டை தவிர மற்ற தனியார் வாகன உபயோகத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தன. ரயில் மூலம் பயணம் செய்தவர்கள் போக்குவரத்து தடை காரணமாக ரயில் நிலையங்களிலேயே நேற்று இரவு தங்க நேர்ந்தது.  அவர்கள் அனைவரும் இன்று காலை 4 மணிக்கு மேல் ஆட்டோ மற்றும் வாடகைக் கார் மூலம் வீடுகளுக்குத் திரும்பினர்.

இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இரவு நேர ஊரடங்கு காரணமாகச் சென்னையில்  இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.  நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மின்சார ரயில் சேவை இருக்கும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.