டெல்லி:
டிஎஸ்பி விஸ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மிகவும் பரபரப்பான கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
vishu
கடந்த ஆண்டு செப்டம்பரில் திருச்செங்கோடு டிஎஸ்பி-யாக இருந்தபோது விஷ்ணுபரியா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால், தமிழக அரசு உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு செய்தது.
இன்று காலை விசாரணைக்கு வந்த விஷ்ணுபிரியா வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.
தமிழகஅரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது,
திருச்செங்கோட்டில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா 2015 செப்டம்பர் தற்கொலை செய்து கொண்டார். விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடிந்துள்ளதாக தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிந்தநிலையில் சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
மிகவும் அபூர்வமான வழக்கைத்தான் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாத உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
suprmeநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் விஷ்ணுபிரியா.  திருச்செங்கோடு டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி மாலை தூக்கில் தொங்கிய நிலையில் விஷ்ணுபிரியா இறந்து கிடந்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா  விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் அளித்த நெருக்கடி காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ‘
மேலும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமார் அளித்த நெருக்கடி காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக  அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி.யாக இருந்த மகேஸ்வரி, வழக்குரைஞர் மாளவியா ஆகியோர் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து, டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கோடு, பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவர் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இதையடுத்து விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தற்போது உச்ச நீதி மன்றமும் சிபிஐ விசாரணைக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதால், இந்த வழக்கு முறைப்படி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெறும். அதன்பிறகுதான் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழும் என தெரிகிறது.