தாய்லாந்து நாட்டில் உள்ள புத்த மத கோயிலில் துறவிகள் போதை மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களை கோயிலை விட்டு நிர்வாகம் வெளியேற்றியது.

பெட்சாபுன் மாகாண பியூங் சாம் ஃபான் மாவட்டத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் திங்களன்று அதிகாரிகள் போதை மருந்து பரிசோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது இம்மாவட்டத்தில் உள்ள நான்கு புத்த கோயில்களில் மொத்தம் எட்டு புத்த பிட்சுக்கள் போதை மருந்து பயன்படுத்தியது அவர்களின் சிறுநீர் மாதிரியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ஒரே கோயிலைச் சேர்ந்த மடாதிபதி உள்ளிட்ட நான்கு பேர் போதை மருந்து பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவர்கள் அனைவரும் அந்த கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டு போதை மருந்து மறுவாழ்வு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த கோயிலில் பூஜை செய்ய யாரும் இல்லாத நிலை உருவாகி உள்ளது தவிர துறவிகள் யாசகம் ஏற்பதும் அவர்களுக்கு யாசகம் இடுவதும் புனிதமாகவும் முதல் கடமையாகவும் கருதப்படும் நிலையில் அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் இருந்து அனைத்து புத்த துறவிகளும் வெளியேற்றப்பட்டதால் கிராம மக்கள் கவலையடைந்துள்ளனர்.

புத்த கோயில்களை நிர்வகிக்கும் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு பதிலாக அந்த கோயிலுக்கு தற்காலிகமாக மடாதிபதிகளை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்துள்ளது.

தாய்லாந்தில் மத்திய மாவட்டமான இந்த மாவட்டத்தில் மட்டும் பெரியவர் சிறியவர் என சுமார் 400 பேர் போதை மருந்து அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான மியான்மரில் இருந்து தாய்லாந்து வழியாக லாவோஸ் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு போதை மருந்து கடத்தல் சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாகவும் திரிவேணி சங்கமாக உள்ள தாய்லாந்தில் போதை மாத்திரைகள் மலிவான விலைக்கு கிடைப்பதாகவும் அவை ஒரு பீர் விலையை விட குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்நாட்டில் சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் போதை மாத்திரைக்கு அடிமையாக மாறிவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அரசு அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வந்தபோதும் போதை மருந்து நடமாட்டத்தை குறைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.