ஸ்ரீநகர்:

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசுகையில், ‘‘காஷ்மீர் பள்ளிகளில் இரண்டு விதமான வரைபடங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான விஷயங்களை கற்றுத்தரும்?.

மாணவர்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர். இதனால், அவர்கள் பயங்கரவாதிகளாக மாறுகின்றனர். மாநிலத்தில் மதராசாக்களும், மசூதிகளும் மாணவர்கள் மத்தியில் தவறான தகவலை பரப்புகின்றன என்று தெரிவித்திருந்தார். ராவத்தின் இந்த கருத்துக்கு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபாவுக்கு நெருக்கமான கல்வி அமைச்சர் அல்தாப் புகாரி பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீநகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அல்தாப் பேசுகையில், ‘‘ராணுவ தளபதி என்பவர் நாட்டின் உயர் பதவியில் இருப்பவர். மரியாதைக்குறிய நபர். அவர் நன்கு படித்தவர். அவர் சார்ந்த பணி குறித்து எங்களுக்கு சந்தேகமும் இல்லை. ஆனால், கல்வி குறித்து கருத்து கூறும் அளவுக்கு கல்வியாளர் கிடையாது. கல்வித்துறை மாநில அரசின் பட்டியலில் உள்ளது. அது பொதுப் பட்டியலில் இல்லை.

கல்வி துறையை எப்படி நடத்துவது என்பது குறித்து எங்களுக்கு தெரியும். ராணுவத்துக்கு என்று சில கடமைகள் உள்ளது. அதை அவர்கள் பொறுப்புடன் செய்யட்டும். எங்களுக்கு என்று தனி கல்வி திட்டம் உள்ளது. எங்களது பிரச்னைகளை நாங்கள் கண்டறிவோம்.

கல்வி துறையில் வல்லுனர்களாக இல்லாதவர்கள் தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். பள்ளிகளில் எந்த வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இது தேவையில்லாத மற்றும் ஏற்க முடியாத விஷயமாகும்’’ என்றார்.