ஈரோடு: ஈரோடு கிழக்கு தோகுதியில் திமுக-நாம் தமிழர் கட்சியினர் இடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டது. திமுகவினர் நாம் தமிழர் கட்சியினரை மாடியில் இருந்து கல்வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு  செய்துள்ள காவல்துறையினர்,   நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 2 பேரை கைது செய்துள்ளனர்.

ஈரோடு  கிழக்கு தொகுதியில்  27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதனால் அங்கு உச்சக்கட்ட பரப்புரை நடைபெற்று வருகிறது. நேற்று மாலை,  வீரப்பசத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து கற்கள் வீசப்பட்டது. பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள்,பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் மீது கற்களை கொண்டு தாக்கியதால் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து,  திமுக -நாம் தமிழர் கட்சி தொண்டர் களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த  தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர், திமுகவை சேர்ந்த 4 பேர், மற்றும் 3 போலீசார் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர்.

மோதலையடுத்து அந்த பகுதியில் துணை ராணுவப் படையினர், போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் திமுக-நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரு கட்சியினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சீமானை அந்த பகுதியில் பேச விடாமல் காவல்துறையினர் தடுத்தனர். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில்,  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கணேஷ்பாபு, விஜய ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.