மிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 86வது பிறந்த நாள் விழா கடந்த 22ம் தேதி, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.

விழாவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு குமரி அனந்தனை வாழ்த்திப் பேசினர்.

காமராஜர் அரங்க வளாகத்தில் புத்தக விற்பனையாளர்கள் பலர், தரையில் புத்தகம் விரித்து விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். அரசியல் நிகழ்வுகளில் இது சகஜம்தான்.

ஆனால் காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன், திடீரென, ஒரு புத்தக விற்பனையாளரை, “இங்கே கடை விரிக்கக்கூடாது. கிளம்புங்கள்” என்று அதட்டலாக கூறினார். அது திராவிடர் கழகம் சார்பாக வைக்கப்பட்டிருந்த புத்தகக் கடை. கடை வைத்திருந்தவர், “ஏன் எடுக்க வேண்டும்” என்று கேட்டார்.

அமெரிக்கை நாராயணன்

அதற்கு அமெரிக்கை நாராயணன், “இது காங்கிரஸ் முன்னாள் தலைவருக்காக காங்கிரஸ் கட்சி நடத்தும் விழா. இந்த அரங்கில் “காந்தி பட எதிர்ப்பு போராட்டம், இந்திய தேசப்பட எரிப்பு போராட்டம்” என்ற தலைப்பிலான புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறீர்கள். காமராஜர் தனது தலைவராக போற்றிய தீரர் சத்யமூர்த்தியையும் இழிவாகக் குறிப்பிடும் புத்தகங்கள், ராஜாஜியையும் தவறாக சித்தரிக்கும் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறீர்கள். காங்கிரஸ் விழா அரங்கத்தில் எப்படி இதை விற்பனை செய்யலாம்” என்றார் ஆவேசமாக.

புத்தகங்கள்..

அந்த நபர்  “எங்கள் தலைவர் கி.வீரமணி இந்த விழாவுக்கு வருகிறார்” என்றார். உடனே அமெரிக்கை நாராயணன், “இங்கே இந்த புத்தகங்களை விற்கக்கூடாது என நான் சொன்னதாக வீரமணியிடம் சொல்லுங்கள்” என்று கூற, அந்த நபர் புத்தகங்களை அடுக்கி எடுத்துச் சென்றுவிட்டார்.

இதனால் அந்தப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.