சென்னை:  தொலைக்தூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கூறி உள்ளது.  இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் உள்ளவர்கள் தங்களது தகுதியை உயர்த்துவதற்கு பதிலாக, தங்களது சம்பளத்தை உயர்த்தும் வகையில் தொலைதூரக்கல்வி முலம் பட்டம் பெற்று, அதற்கான சம்பள உயர்வை பெற்று வருகின்றனர். இவர்களால், நேரடியாக கல்லூரிக்கு சென்று படித்தவர்களுக்கு ஈடாக பணி செய்ய முடியாத நிலையே உள்ளது.

இதுபோன்ற செயல்கள் ஆசிரியர்கள் மட்டத்தில் அதிகமாக உள்ளது. வெறும் பிளஸ்2 படித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி பெற்றுவிட்டு பணிக்கு வரும் ஆசிரியர்கள், தொலைதூரக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளை பெற்று, தங்களது தகுதிகளை உயர்த்திக்கொள்வதற்கு பதிலாக அரசு வழங்கும் பணச்சலுகைகளை மட்டுமே உயர்த்திக் கொள்கின்றனர். ஆளும் அரசுகள், அரசு ஊழியர்களின் வாக்குக்காக அவர்களின் தொலைதூரக்கல்வியை அங்கீகரித்து பதவி உயர்வு வழங்கி வருகின்றனர்.  இதனால், பல ஆசிரியர்கள்  உதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியர்கள் உள்பட உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றும், அவர்களால் மாணாக்கர்களுக்கு சரியான முறையில் பாடம் போதிக்க முடியாத நிலையே தொடர்கிறது. இதை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

இந்த நிலையில்,இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்து, தொலைதூர கல்வி முலம் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்  பதவி பெற்றுள்ள நித்யா என்பவர், தனக்கு பதவி உயர்வு  வழங்கக் கோரி நி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்து உயர் நீதிமன்றம், கடுமையாக சாடியுள்ளது.

தொலைக்தூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்று அதிரடியான உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டி உள்ளது. தற்போது ஆசிரியர்களாக உள்ள பலர், கல்லூரிகளுக்கு நேரில் சென்று படிக்காதவர்களாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியராக நியமிக்க உத்தரவு அளித்துள்ளனர். ஆசிரியர் நியமன நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்யவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு அளித்துள்ளார்.

கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமன நடைமுறையை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

ஆசிரியர் பணிக்கு குறைந்த பட்ச தகுதியாக ஒரு டிகிரி மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை தமிழகஅரசு கட்டாயமாக்க வேண்டும். பிளஸ்2 படித்து விட்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு படிக்கும் நடைமுறையை மாற்றப்பட வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களின் கருத்தாகவே உள்ளது. ஆவன செய்யுமா தமிழகஅரசு…