சென்னை:  10ம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்க தகுதியானவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசியச் சட்டப் பள்ளி உட்பட, இந்தியா முழுவதும் 22 சட்டப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் B.A., LL.B (Hons) மற்றும் B.Com., LL.B (Hons) ஆகிய ஐந்து வருட இளநிலைப் பட்டப்படிப்புகளிலும், LL.M ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.  முதுநிலைச் சட்டப்படிப்புக்கு LL.B அல்லது அதற்கு இணையான தேர்வில் பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50% மதிப்பெண்களுடனும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

இளநிலைச் சட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதன்படிப்பில், பொதுப்பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45% மதிப்பெண்களுடனும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவினர் 40% மதிப்பெண்களுடனும் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

இந்த நிலையில், பிளஸ்2 படிக்காமல் டிப்ளமோ முடித்தவர்கள், 3 ஆண்டு சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதி கோரி கோவை மாணவி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  12ம் வகுப்பு படிக்காமல் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டபடிப்புக்கு தகுதியானவர்கள் என்று பார் கவுன்சில் தெரிவித்துள்ளது சரியே என்று உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி,  10ம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்க தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பான உரிய அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.