திருவனந்தபுரம்

ம்மை நடிகை பலாத்கார வழக்கில் தமது முதல் மனைவி மஞ்சு வாரியர் சிக்க வைத்ததாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 இல் கேரளாவில் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையொட்டி நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். திலீப் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார். கொச்சி குற்றப் பிரிவு காவல்துறை தொடர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில் நடிகர் திலீப்பிடம் நடிகையின் பலாத்கார காட்சிகள் இருப்பது உண்மைதான் என்றும், இது தொடர்பாகக் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   திலீப் மீது ஆதாரங்களை அழித்தது தொடர்பாக மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

தற்போது நடிகர் திலீப் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனுவில் ”காவல்துறையும் அரசுத் தரப்பும், பாதிக்கப்பட்ட நடிகையும் இந்த வழக்கைத் தேவையில்லாமல் நீட்டிக்கொண்டு செல்கின்றனர். அவர்கள் தனி நீதிமன்ற நீதிபதிக்குப் பதவி உயர்வு கிடைத்து வேறு நீதிமன்றத்திற்குச் செல்லும் வரை விசாரணையை நீட்ட திட்டமிட்டுள்ளனர்.  ஆகவே இந்த வழக்கை விரைந்து முடிக்க தனி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்.

பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் என்னுடைய முதல் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியருக்கு கேரள காவல்துறையில் நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார்.  தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள அவர் மூலம் தான் இருவரும் சேர்ந்து என்னை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர்.

மலையாள திரை உலகில் என்னுடைய வளர்ச்சியைப் பிடிக்காத சக்தி வாய்ந்த சிலரும் என்னைச் சிக்க வைப்பதற்கு ஒரு காரணமாகும்.  இந்த தொடர் விசாரணையில் எனக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.  அதில் எந்த உண்மையும் இல்லை.”  என நடிகர் திலீப் குறிப்பிட்டுள்ளார். அடுத்த வார, இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.