எண்கண் முருகன் கோவில்

Must read

எண்கண் முருகன் கோவில்
இந்தக் கோவில் திருவாரூர் மாவட்டம் எண்கண் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது ஒரு சிவ ஆலயம். இருந்தாலும் முருகனுக்கு என்று இந்த கோவிலில் தனிச்சிறப்பு உண்டு. திருப்புகழில் அருணகிரிநாதர் இந்த கோவிலைப் பற்றியும், இந்த கோவிலில் உள்ள முருகப்பெருமானின் சிறப்பைப் பற்றியும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எண் என்பது 8 என்ற கணக்கைக் குறிக்கின்றது. நான்கு தலைகளைக் கொண்ட பிரம்மனுக்கு எட்டு கண்கள். பிரம்மன் சிவனை நினைத்து இத்தலத்தில் வழிபட்டதால் இதற்கு எண்கண் என்ற பெயர் வந்தது.
தல வரலாறு
படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தினை மறந்துவிட்டார். அந்த சமயத்தில் முருகன் பிரம்மனிடம், பிரணவ மந்திரத்திற்கு அர்த்தத்தைக் கேட்கப் பிரம்மன் சிக்கலில் சிக்கிக் கொண்டார். இந்த மந்திரத்தின் அர்த்தம் மறந்ததன் காரணமாக முருகனின் கோபத்திற்கு ஆளாகி விட்டார் பிரம்மன். பிரணவ மந்திரத்தின் அர்த்தம் மறந்ததற்குத் தண்டனையாகப் பிரம்மன், முருகனால் சிறையில் அடைக்கப்பட்டார். பிரம்மனின் படைக்கும் தொழிலை முருகனே செய்து வந்தார்.
பிரம்மன் தனது படைக்கும் தொழிலை முருகனிடமிருந்து திரும்பப் பெற்றுத்தருமாறு, சிவபெருமானிடம் வேண்டுதல் வைத்து, பூஜித்து வந்தார். பிரம்மனின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமான், பிரம்மன் முன்னே தோன்றினார். முருகனை அழைத்த சிவபெருமான் படைக்கும் தொழிலைப் பிரம்மனிடமே தருமாறு கூறினார். ஆனால் முருகனோ, ‘பிரணவ மந்திரத்தின் சிறப்பினை அறியாத பிரம்மனிடம் படைத்தல் தொழிலைக் கொடுப்பது சரியல்ல’ என்று மறுத்துவிட்டார்.
சிவபெருமானுக்கு, முருகன் பிரணவ மந்திரத்தை உபதேசித்தது போல், பிரம்மனுக்கும் முருகனே பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை உபதேசிக்க வேண்டும் என்று சிவபெருமான் முருகனிடம் கூறினார். சிவபெருமான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முருகன் பிரணவ மந்திரத்தின் மகிமையையும், அர்த்தத்தினையும் பிரம்மனிடம் உபதேசம் செய்தார்.
பின்பு படைக்கும் தொழிலானது பிரம்மனிடம் அளிக்கப்பட்டது‌. பிரம்மா தனது எட்டுக் கண்களால் சிவனைப் பூஜித்ததால் இந்த தலத்திற்கு பிரமபுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. முருகனால் இந்த உபதேசம் பிரம்மனுக்கு உபதேசிக்கப்பட்டு இத்தலத்தில் முருகன் உற்சவராகக் காட்சியளிக்கின்றார்.
வியாழக்கிழமை தோறும் இங்குள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி விரதம் இருந்து வழிபட்டால் குரு தோஷம் இருந்தால் நீங்கிவிடும். மாணவர்களுக்கான கல்வி தடைகளும், தோஷங்களும் இத்தலத்தில் உள்ள குரு பகவானால் நீக்கப்படுகிறது.
பலன்கள்
கண் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலில் உள்ள சிவனை வழிபட்டு வந்தால் கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம். செவ்வாய்க் கிழமையில் இங்குள்ள முருகனைத் தரிசித்து வந்தால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபட்டால் பதினாறு செல்வங்களும் பெற்றுச் சிறப்பாக வாழ்வார்கள். இந்தத் தலத்தில் வேண்டுதல்களை வைக்கும் பக்தர்களுக்கு, திருமணத் தடை நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும். வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
தரிசன நேரம்:
காலை 6.30AM – 11.00 AM
மாலை 4.00PM – 8.30 P.M
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
எண்கண் 612 603,
திருவாரூர் மாவட்டம்.
தொலைபேசி எண்: 91 -4366-278 531, 278 014, 94884 15137

More articles

Latest article