டெல்லி: பாலியல் புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஷாநவாஸ் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு கூறப்பட்ட பாலியல் புகாரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பாஜக  மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஷானவாஸ் ஹூசேன். இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். ஆனால், அவரது புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்தனர். இதையடுத்து, அந்த பெண் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி,  ஷாநவாஸ் ஹூசேன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டார்.

ஆனால், தீர்ப்பை எதிர்த்து, ஷாநவாஸ் ஹூசேன்  மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளூபடி செய்தது. அதைத்தொடர்ந்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கினை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஷாநவாஸ் ஹூசேன் மீது உடனே எப்.ஐ.ஆர். பதிவு செய்ய காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்டது.

மேலும்,  எந்த ஒரு வழக்கிலும் முதலில் எஃப் ஐ ஆர் பதிவு செய்த பின்னரே விசாரணை நடத்த வேண்டும்.  ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமலேயே போலீசார் தொடர்ந்து அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.   அதனால் உடனடியாக இந்த பாலியல் பலாத்கார புகார் மீது புதுடெல்லி போலீசார் உடனே  எஃப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை அடுத்து ஷாநவாஸ் ஹூசேன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.