டெல்லி: வெளிநாடுகளில் இந்தியாவுக்கு வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி 2வது வாரத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு அரிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 40நாட்கள் தொற்று பரவல் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மீண்டும் புதிய வகை கொரானா பரவல் அதிகரித்து வருகிறது.  சீனாவில், டிசம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது இது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், சீனா உண்மையான தகவல்களை வெளியிடாமல் மறைத்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவிலும் சிலருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் தொற்று பரவல் நடவடிக்கை களை தீவிரப்படுத்த மத்தியஅரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளதுடன், விமான நிலையங்களில் உடனே கொரோனா சோதனையை முடுக்கி விட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க சில மாநிலங்களில் மீண்டும் முக்கவசம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இதனால் தொற்று பரவலுக்கு வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளிடம் மேற்கொண்டு வரும் பரவலான பரிசோதனையில், கடந்த டிசம்பர் 24 முதல் 26 வரையிலான 3 நாட்களில் சர்வதேச பயணிகள் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரின் மரபணு தொடர் மாதிரி முழு அளவில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் BF.7 கொரோனா தொற்று, மற்ற கொரோனா தொற்று வகைகளை விட 16 மடங்கு அதிகம் பரவக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக,  ஜனவரி மாத மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.  இந்தியாவில், அடுத்த 40 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இது ஜனவரி மத்தியில் அதிக பரவலாக மாற கூடும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள்  தெரிவித்து உள்ளன.

தற்போது கொரோனா பாதிக்கபட்டுள்ளவர்கள் உடன் பழகியவர்கள் மூலம் இன்னும் 15 நாட்களில் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும்,  கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உயர்வின் பகுப்பாய்வு அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில்,  இந்த முறை கொரோனா அலை ஏற்பட்டாலும் அதன் பாதிப்பின் கடுமை குறைவாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.