அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள க்னோஸ்வில்லே மருத்துவமனை ஒன்றில் 30 ஆண்டுகளாக உறையவைக்கப்பட்ட நிலையில் இருந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை பிறந்துள்ளது.

ஒரேகோன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் பகுதியைச் சேர்ந்த ரேச்சல் ரிட்ஜ்வே என்ற பெண்ணுக்கு வைக்கப்பட்ட இந்த கருமுட்டை மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

ஒரு ஆண் ஒரு பெண் என அக்டோபர் 31 ம் தேதி பிறந்துள்ள இந்த இரட்டை குழந்தைகளுக்கு லைடியா மற்றும் திமோத்தி என்று பெயரிட்டுள்ளனர்.

பிலிப்ஸ் ரிட்ஜ்வே – ரேச்சல் ரிட்ஜ்வே தம்பதிக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் குழந்தை பெற்றுள்ளனர்.

பலரும் வேண்டாம் என்று தவிர்த்த கருமுட்டைகளைக் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள இவ்விருவரும் ஆர்வம் காட்டியதை அடுத்து 1992 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சேமிக்கப்பட்ட கருமுட்டையைக் கொண்டு குழந்தை பிறந்துள்ளது.

இந்த கருமுட்டையை வழங்கியவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை என்ற போதும் இதுவே மிக நீண்டநாட்கள் உறையவைக்கப்பட்டு சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுபோல் 14 லட்சத்திற்கும் மேலான கருமுட்டைகள் உறையவைக்கப் பட்டுள்ளதாகவும் அவற்றை சாதாரண நிலைக்கு கொண்டுவந்து கருவுறச்செய்யும் மருத்துவமனைகள் அதிகளவில் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.