சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஆவணங்களை பத்திரப்படுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

தற்போதைய திமுக ஆட்சியின்  மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும்  செந்தில்பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக ஊழர் புகார் உள்ளது. ஆனால், இந்த புகார்களை அமைச்சரானதும், அதிகாரத்தின் மூலம் வாபஸ் பெறும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி, அவர்மீது  தொடரப்பட்ட ஊழல் வழக்குகளை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருந்தது.

இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சில மனுதாரர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டதுடன், தமிழக காவல்துறையின் நடவடிக்கையும் கடுமையாக விமர்சித்ததனர்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.  இதற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி சார்பில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த 10ஆம் தேதி ஆஜரானார். அப்போது அவர், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு மனு நவம்பர்  23-ந்தேதி விசாரிக்கப்படும் என அறிவித்தது.

அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர் அதிகாரத்தில் இருப்பதால் சாட்சியங்களில் தலையிட வாய்ப்புள்ளது எனவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. மேலும்,  வழக்கை முடிக்க 4 முதல் 5 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் பெயர் இல்லாததால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என  வாதிட்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேல்முறையீடு மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, இறுதி விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. மேலும் மோசடி விவகாரம் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை தற்போதுள்ள நிலையிலேயே பத்திரமாக வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.