சென்னை: நடிகர் கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்ட விவகாரத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் விசாரணைக்கு நேரில் ஆஜராக   மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டின் சுவரில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு, மற்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வந்தது.

அந்த சமயத்தில், சென்னை எல்டாம்ஸ் சாலையில்உள்ள  நடிகர் கமல்ஹாசன் வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கமலுக்கு கொரோனா இல்லாத நிலையில்,அவரதுவீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த மாநகராட்சி அதிகாரிகள், நடிகை கவுதமியின்  அட்ரஸ், இந்த முகவரியில் இருந்ததால் (கமலும், கவுதமியும் பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது) ஒட்டியதாக கூறினர்.

ஆனால், இதற்கு கண்டனம் தெரிவித்த கமல்,  தான் எங்கும் செல்லவில்லை என்றும் தனக்கு கொரோனா இல்லை என்றும் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.   இதனையடுத்து அந்த போஸ்டர் அகற்றப்பட்டது.

இந்த விவகாரம் மாநில மனித உரிமை ஆணையம் வரைச் சென்றதால், மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில், நோட்டீஸ் ஒட்டிய ஊழியர் வினோத்குமாரை பணியில் சேர அனுமதி மறுக்கப்பட்டதாக மனித உரிமை ஆணையத்திடம் மேலும் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை இன்று விசாரித்த ஆணையம், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செப்.30க்குள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.