டெல்லி: கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் விகிதம் 2.28% மட்டுமே என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.
உலகம் முழுவதும் ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விடவில்லை. நாள்தோறும் பாதிக்கப்பட்டோர், பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
ஆனாலும், அதிக கொரோனா நோயாளிகள் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் விகிதம் 2.28% என்று கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தீவிர பரிசோதனைகள், தொடக்க நிலை சிகிச்சை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கவனத்துடன் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அதன் எதிரொலியாக குணமடைவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. இறப்பவர்களின் விகிதம் குறைந்து, தற்போது 2.28 % ஆக இருக்கிறது. உலக நாடுகளில் இறப்பவர்களின் விகிதம் குறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
24 மணி நேரத்தில் மட்டும் 31,991 நோயாளிகள் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இருப்பவர்களுக்கும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.