பாரிஸ்

கொரோனா பாதிப்பால் உலகெங்கும் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு 154 கோடி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகெங்கும் கொரோனா வைரஸால் சுமார் 25.77 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்,  இவர்களில் 1.79 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  உலக நாடுகளில் அதிக அளவில் அமெரிக்கா பாதிப்பு அடைந்துள்ளது.  அடுத்ததாக ஸ்பெயின் இத்தாலி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் உள்ளன.   கொரோனா பாதிப்பு தொடங்கியது முதலே பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த கொரோனா பாதிப்பு எப்போது முடிவடையும் என்பது யாருக்கும் தெரியாத நிலை உள்ளது.  இது முழுவதுமாக முடிவடைந்தால் மட்டுமே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.  ஒரு சில நாடுகளில் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடந்து வருகின்றன.   இன்று பாரிஸ் நகரில் யுனெஸ்கோ நிறுவன கல்விப் பிரிவு துணை இயக்குநர் ஸ்டெபானியா ஜியானி இது பற்றி கவலை தெரிவித்துள்ளார்.

ஸ்டெபானியா ஜியானி, ”கொரோனா வைரஸ் தாக்குதலால் பல பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.  இதனால் மாணாக்கர்களின் கவ்லி இடையில் நிறுத்துவது அதிகரிக்கும். குறிப்பாகப் பெண்கள் அதிக அளவில் பாதிப்பு அடைவார்கள்.  ஏற்கனவே கவ்வியில் இருக்கும் ஆண் பெண் பாலின் இடைவெளி இதனால் மேலும் அதிகரிக்கும்.  பெண்களுக்குச் சிறுவயதில் கட்டாய திருமணம் செய்வித்து மகப்பேறு உண்டாகலாம்.

கொரோனா தாக்குதலால் உலக அளவில் பள்ளிக் கல்வி கற்கும் மாணவ மாணவிகளில் 89% பேர் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.  கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் 154 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 74 கோடி பேர் பெண்கள் ஆவார்கள்.   அந்த பெண்களில் 11 கோடிப் பேர் உலகின் வளர்ச்சி குறைந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்   ஏற்கனவே இவர்களுக்குக் கல்வி என்பது போராட்டமாக உள்ளதால்  இது மேலும் அதிகரிக்கலாம்.

இதைப் போல் சமூகப் பாதுகாப்பு குறைவாக உள்ள  நாடுகளில் வசிக்கும் பெண் குழந்தைகளும் பொருளாதார பாதிப்பையும் கல்வி பாதிப்பையும் சந்திக்க நேரிடும்.   இவர்களுக்கு நிதி வசதியும் கல்வி பயில் வாய்ப்பும் இருந்தால் மட்டுமே பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவார்கள்.  எனவே அந்தந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்   இந்த நேரத்தில் பெண்கள் கல்விக்கு எதிரான சவாலை முறியடித்து அவர்கள் கல்வி தடைபடாமல் இருக்கக் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறி உள்ளார்.