டெல்லி: நேரு குடும்பத்துக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் பேசியதாக பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி எம்பி அண்மையில் லண்டன் சென்றிருந்தார். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிய ராகுல், இந்தியாவில் நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயகக் கட்டமைப்புகள் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்துக்கு குரல்கள் அடக்கப்படுகின்றன என விமர்சித்திருந்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா குறித்து வெளிநாட்டில் அவமரியாதையாக பேசியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வின் தொடக்க நாளிலேயே லோக்சபாவில், ராகுல் காந்தி பேச்சுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். ராகுல் காந்தியின் வெளிநாட்டு விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைக் கண்டிக்க வேண்டும் என்றார் ராஜ்நாத்சிங்.

இதேபோல ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராகுலுக்கு எதிராக கடுமையாக பேசினார். அத்துடன் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கடந்த 5 நாட்களாக ஆளும் பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளனர். இ

தற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள், அதானி குழும மோசடிகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என வலியுறுத்தினர். இந்த அமளியால் கடந்த 5 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கிவிட்டன.

இந்தநிலையில் ராஜ்யசபாவில் இன்று பிரதமர் மோடிக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் கேசி வேணுகோபால், உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத்தொடரின்போது பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் நேரு மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல்காந்தி குடும்பத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.