சென்னை:

காவலர்களின் அடாவடி செயலால் தீக்குளித்த இளைஞரை சந்தித்து ஆறுதல் கூறிய சென்னை மாநகர ஆணையர், தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நெல்லையைச் சேர்ந்தவர் மணிகண்டன்(21). சென்னை தாம்பரத்தில் வசிக்கும் இவர்,  சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இன்று சவாரி ஏற்றிக்கொண்டு தரமணி பகுதிக்கு வந்தார்.

அப்போது காரை வழிமறித்த காவலர்கள், நான்கு பேர், சீட் பெல்ட் ஏன் அணியவில்லை என்றுகேட்டு மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். இதனால் மனமுடைந்த அவர் வண்டியில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைத்தனர். பிறகு காவல்துறை வாகனத்தில் அந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

உடல் முழுவதும் கருகிய நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மணிகண்டனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், பாதிக்கப்பட்ட இளைஞர் மணிகண்டனை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட இளைஞர் மணிகண்டனுக்கு நல்ல முறையில் சிகிச்சையளிக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். மேலும் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.