கோவை: கோவை அருகே பட்டியலின ஊராட்சி தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டிய சம்பவத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது ஜே.கிருஷ்ணாபுரம். இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவியாக இருப்பவர் சரிதா. உள்ளாட்சி தேர்தலில் வென்ற இவர், கோவை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தம்மை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உட்கார விடாமல் அதே கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் மிரட்டுவதாக கூறி உள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் நாற்காலியில் உட்கார்ந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் தொடர்பாக சரிதா முகநூலில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.