சென்னை: சென்னையில் உள்ள பழம்பெரும் ஸ்டேடியமான எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம், புத்தாக்கம் செய்யப்பட்டு, புதிய கேலரிகளும் கட்டப்பட்டுள்ள நிலையில், புதிய கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதற்கு   ‘கலைஞர் மு.கருணாநிதி’ என்ற பெயரையும் சூட்டினார்.

சென்னை சேப்பாக்கம்  மைதானம் கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டது. அப்போது ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகள் புதிதாக அமைக்கப் பட்டன. ஆனால் இந்த 3 கேலரிகளும் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி சீல் வைக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளும், ஒப்பந்த புதுப்பிப்புக்கும் கடந்த 2021-ம் ஆண்டு தீர்வு காணப்பட்டது.  இதைத் தொடர்ந்து 2022-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் பழைய பெவிலியன் கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்த இடத்தில் புதுப்பொலிவு மற்றும் நவீன வசதிகளுடன் பெவிலியன் கட்டப்பட்டுள்ளது.  இதன் காரணமாக மைதானத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் பட்டப்பட்டன.

அதுபோல ரூ.139 கோடியில் புதிதாக கலைஞர் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெவிலியன் கேலரியில் வீரர்களின் ஓய்வு அறை விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் உடற்பயிற்சிக் கூடம், உள்ளரங்க வலைபயிற்சி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக பெவிலியன் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்டோர் மற்றும் பல்வேறுநினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக ‘டை’ யில் முடிவடைந்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 1986-ம் ஆண்டுடெஸ்ட் போட்டி, சாதனை நிகழ்த்தப்பட்ட பல்வேறு தருணங்களின் கலைப்படைப்புகள், சுவ ரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. ‘ஐ’ கேலரியின் லோயர் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியன் கேலரியின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெவிலியனை திறந்து வைத்தார்.  தொடர்ந்துபெவிலியனில் அமைக்கப்பட்டுஉள்ள கேலரியும் திறக்கப்பட்டது. இந்த கேலரிக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், மைதான உள்கட்டமைப்பு கமிட்டியின் தலைவர் ரூபா குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு,தீபக் ஷாகர், பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.